4 வயது மகளை கொன்று தொழிலாளி தற்கொலை


4 வயது மகளை கொன்று தொழிலாளி தற்கொலை
x

திருமருகல் அருகே குடும்ப தகராறில், 4 வயது மகளை கொன்று விட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் அருகே குடும்ப தகராறில், 4 வயது மகளை கொன்று விட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

குடும்ப தகராறு

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சியாத்தமங்கை ஊராட்சி மேலிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் மாரிமுத்து(வயது 35). கூலித்தொழிலாளி. இவருக்கும், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மாப்பிள்ளை குப்பம் தட்டாத்திமூலை பகுதியை சேர்ந்த தீபாவுக்கும்(30) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனது. இவர்களுக்கு 4 வயதில் ருத்ரா என்ற பெண் குழந்தை இருந்தது.

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. மாரிமுத்து, தனது மனைவி தீபாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

மனைவி வர மறுப்பு

இதனால் தீபா தனது கணவருடன் கோபித்துக்கொண்டு 4 வயது குழந்தையுடன் தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று மனைவியை சமாதானம் பேசி அழைத்து வர மாரிமுத்து தனது மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற அவர் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு மனைவியை அழைத்துள்ளார். அதற்கு தீபா மறுத்ததால் குழந்தை ருத்ராவை மட்டும் தன்னுடன் அழைத்து வந்துள்ளார்.

குழந்தையை பெற்றுக்ெகாள்ளுமாறு...

அங்கு வந்த பின்னர் குழந்தை ருத்ரா தனது தாயாரிடம் செல்ல வேண்டுமென தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளது. இதனால் தீபாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மாரிமுத்து, குழந்தை அழுதுகொண்டே இருப்பதால் திருமருகல் கடைத்தெருவுக்கு வருமாறும், அங்கு வந்து குழந்தையை பெற்றுக்கொள்ளுமாறும் கூறி யுள்ளார்.

இதனையடுத்து தீபா திருமருகலுக்கு வந்துள்ளார். வெகுநேரம் ஆகியும் மாரிமுத்துவும், குழந்தையும் வராததால் கணவரின் செல்போனுக்கு தீபா தொடர்பு கொண்டு உள்ளார்.

அதிர்ச்சி

செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டும் கணவரிடம் இருந்து எந்தவித பதிலும் இல்லாததால் தீபா கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் வீட்டின் கதவை திறந்தபோது மாரிமுத்து தூக்கில் பிணமாக தொங்கினார். படுக்கையில் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது. அந்த பரிதாப காட்சியை பார்த்து அதிர்ச்சியடைந்த தீபா சத்தமிட்டு அலறினார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது மாரிமுத்துவும், குழந்தையும் இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவர்கள், திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விசாரணை

தகவலின் பேரில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாரிமுத்து, ருத்ரா ஆகியோர் உடல்களை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து மாரிமுத்துவின் தந்தை ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மகளை கொன்று தூக்குப்போட்டு தற்கொலை

போலீசாரின் விசாரணையில், மனைவி தன்னுடன் குடும்பம் நடத்த வர மறுத்ததாலும், குழந்தை தனது தாயிடம் செல்ல வேண்டுமென தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததாலும் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து, குழந்தையின் முகத்தை துணியால் மூடி கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

குடும்ப தகராறில் 4 வயது மகளை கொன்று விட்டு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story