கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை


கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை
x

கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்ற மனைவிக்கு செல்போனில் தகவல் சொல்லிவிட்டு தூக்கில் தொங்கினார்.

காசிமேடு,

சென்னை காசிமேடு விநாயகபுரம் 1-வது தெருவைச் சேர்ந்தவர் ரகுராமன் (வயது 38). இவர், எவர்சில்வர் பட்டறையில் பாலீஷ் போடும் வேலை பார்த்து வந்தார். இவருக்கு சாமுண்டீஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

ரகுராமன், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தனியார் வங்கி ஒன்றில் ரூ.2 லட்சம் கடன் வாங்கினார். அதற்கு மாத தவணையாக ரூ.6 ஆயிரம் கட்டி வந்தார். கடந்த சில மாதங்களாக சரியாக வேலை இல்லாததால் வங்கிக்கு கட்டவேண்டிய மாத தவணைைய கட்டவில்லை என தெரிகிறது.

தற்கொலை

இதனால் வங்கி ஊழியர்கள் 2 பேர், பணத்தை கட்டச்சொல்லி ரகுராமனின் வீட்டுக்கு வந்து அவரை கட்டாயப்படுத்தினர். இதனால் மனமுடைந்த ரகுராமன், வேலைக்கு சென்றிருந்த மனைவியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு, "வங்கி ஊழியர்கள் பணம் கேட்டு மிரட்டி நெருக்கடி கொடுக்கின்றனர். நான் தூக்குப்போட்டு தற்கொலை செய்யப்போகிறேன். குழந்தைகளை நீ நன்றாக பார்த்துக்கொள்" என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.

அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த சாமுண்டீஸ்வரி, அருகில் உள்ள வீட்டுக்கு போன் செய்து தனது வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறினார். அவர்கள் சென்று பார்த்தபோது வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் ரகுராமன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ஊழியர்களிடம் விசாரணை

இதற்கிடையில் ரகுராமனுக்கு நேரிலும், தொலைபேசியிலும் கடனை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்த வங்கி ஒப்பந்த ஊழியர்களை ரகுராமின் உறவினர்கள் தொடர்பு கொண்டு, "பணம் ரெடியாக உள்ளது. வந்து வாங்கி செல்லுமாறு" கூறினர்.

இதனை உண்மை என்று நம்பி பணத்தை வாங்க வீட்டுக்கு வந்த வங்கி ஊழியர்கள் 2 பேரையும் பிடித்து காசிமேடு போலீசில் ஒப்படைத்தனர். இதுபற்றி காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வங்கி ஊழியர்கள் 2 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.


Next Story