கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலி
திருவண்ணாமலை அருகே கார் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
திருவண்ணாமலை அருகில் உள்ள வேடியப்பனூர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 50), தொழிலாளி.
இவர் நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் திருவண்ணாமலை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பாலியப்பட்டு ஜங்சன் அருகில் சாலையை கடக்க முயன்றார். அப்போது பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த கார் அவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தினால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை என்பவர் சரி செய்து கொண்டிருந்தபோது அந்த வழியாக சென்ற காரின் சைடு கண்ணாடி அவர் மீது இடித்தது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
பின்னர் அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு சென்றார்.