சங்கராபுரத்தில் காயங்களுடன் தொழிலாளி பிணம்: சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி 2-வது நாளாக உறவினர்கள் மறியல்


சங்கராபுரத்தில் காயங்களுடன் தொழிலாளி பிணம்: சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி 2-வது நாளாக உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 19 May 2023 12:15 AM IST (Updated: 19 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரத்தில் காயங்களுடன் தொழிலாளி பிணமாக கிடந்த சம்பவத்தில் அவரது சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி 2-வது நாளாக உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் புதுகாலனியை சேர்ந்த ராமு மகன் துரை (வயது 43). செருப்பு தைக்கும் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் காலையி் கள்ளக்குறிச்சி மெயின் ரோட்டில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கி பின்புறம் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரை யாரோ கொலை செய்து விட்டதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தக்கோரியும் துரையின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று முன்தினம் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சங்கராபுரம் போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றும் துரையின் உறவினர்கள் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் 2-வது நாளாக மறியலில் ஈடுபட்டனர். அப்போது துரை சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷம் எழுப்பினர். இதுபற்றி அறிந்த சங்கராபுரம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சங்கராபுரம்- திருவண்ணாமலை- கள்ளக்குறிச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story