பன்றிக்காய்ச்சலுக்கு தொழிலாளி பலி


பன்றிக்காய்ச்சலுக்கு தொழிலாளி பலி
x
தினத்தந்தி 28 Sep 2022 6:45 PM GMT (Updated: 28 Sep 2022 6:46 PM GMT)

விருத்தாசலம் அருகே பன்றிக்காய்ச்சலுக்கு தொழிலாளி பலியானார். அவரது உடலை சொந்த ஊருக்குள் கொண்டு வர கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பரவலூர் இருளர் தெருவை சேர்ந்தவர் சின்னசாமி மகன் பாண்டியன் (வயது 52). தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, பாண்டியன் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு பாண்டியன் உயிரிழந்தார்.

இதையடுத்து பாண்டியனின் உடல் அவரது சொந்த கிராமமான பரவலூர் இருளர் தெருவிற்கு கொண்டுவர அவருடைய உறவினர்கள் நேற்று ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அக்கிராம மக்கள் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்த பாண்டியனின் உடலை கிராமத்துக்குள் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவரது உடலை ஊருக்குள் வந்தால் நோய் பரவும் அபாயம் உள்ளது என விருத்தாசலம் வருவாய்த்துறைக்கு புகார் தெரிவித்தனர்.

அதன்பேரில் விருத்தாசலம் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் விருத்தாசலம் போலீசார் பரவலூருக்கு விரைந்து வந்து கிராம மக்களை சமாதானப்படுத்தியதோடு, பாண்டியனின் உடலை நேரடியாக சுடுகாட்டுக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி பாண்டியனின் உடல் அதிகாரிகள் ஆலோசனையின்பேரில் சுடுகாட்டுக்கு நேரடியாக கொண்டு வரப்பட்டு, உறவினர்கள் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அக்கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story