கிணற்றில் தவறிவிழுந்து தொழிலாளி பலி
ஓமலூர்:-
தொளசம்பட்டி அருகே கிணற்றில் தவறிவிழுந்து தொழிலாளி பலியானார்.
தொழிலாளி
ஓமலூரை அடுத்த தொளசம்பட்டி ஊராட்சி மேல் ரெட்டிபட்டியைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 35), நெசவு தொழிலாளி. இவருடைய மனைவி வனிதா (30). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
நெசவுத்தொழிற்கூடத்திற்கு விடுமுறை என்பதால் நேற்று மாலை இவர் மது குடித்துவிட்டு ரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றின் திட்டின் மேல் படுத்திருந்தார். அப்போது நிலை தடுமாறி அவர் கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.
உடல் மீட்பு
இதுபற்றி தகவல் கிடைத்ததும், ஓமலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் நிலைய அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கிணற்றில் தவறிவிழுந்து தண்ணீரில் மூழ்கிய பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தொளசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.