கரூர் அரசு ஆஸ்பத்திரியில் தொழிலாளி சாவு; உறவினர்கள் திடீர் மறியல்; 10 பேர் கைது
கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தால் தொழிலாளி இறந்ததாக கூறி அவரது உறவினர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளி சாவு
கரூர் தாந்தோணிமலை கணபதி பாளையத்தை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 48). இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக காலில் உள்ள நரம்பு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில தினங்களாக ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவும் குறைந்ததாக தெரிய வருகிறது. இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரைராஜ் நேற்று முன்தினம் மேல் சிகிச்சைக்காக காந்தி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி துரைராஜ் பரிதாபமாக இறந்தார்.
சாலை மறியல்
இந்தநிலையில் சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாலேயே துரைராஜ் இறந்ததாக கூறி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்களை கண்டித்து துரைராஜின் உறவினர்கள் மற்றும் பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட செயலாளர் சம்பத் தலைமையில் கரூர்-திருச்சி நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாததால் மறியலில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர் இந்த சம்பவத்தால் கரூர்- திருச்சி சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.