டிரான்ஸ்பார்மரில் பழுதை சரிசெய்த போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


டிரான்ஸ்பார்மரில் பழுதை சரிசெய்த போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
x

ஜோலார்பேட்டை அருகே டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்த போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் அவரை அழைத்துச்சென்ற விவசாயி வீட்டை சூறையாடினர்.

திருப்பத்தூர்

மின்சாரம் தாக்கி சாவு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த அடியத்தூர் கிராமம், தாயப்பன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சாமுடி. இவரது மகன் ராகுல் (வயது 22), கட்டிட மேஸ்திரி. அதேப்பகுதியை சேர்ந்தவர் மையா (60). இவரது நிலத்தில் உள்ள மின் மோட்டார் ஓடாததால் அதேப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதை சரிசெய்ய ராகுலை அழைத்துள்ளார்.

இதனால் ராகுல் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி மின்பழுதை சரி செய்ய முயன்றுள்ளார். அப்போது திடீரென ராகுல் மீது மின்சாரம் பாய்ந்து கை, முகம் போன்றவை கருகி உயிருக்கு போராடினார். உடனே மையா, ராகுலை காப்பாற்ற விறகு கட்டையால் கீழே தள்ளி விட்டு விட்டு அங்கிருந்து மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் அங்கிருந்தவர்கள் ராகுலை பார்த்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ராகுல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

வீடு சூறை

இந்தநிலையில் ராகுல் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ராகுல் சாவிற்கு, மையாதான் காரணம் என கூறி அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டில் யாரும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பூட்டிய வீட்டை உடைத்து வீட்டில் இருந்த டி.வி., மோட்டார் சைக்கிள், சமையல் பாத்திரங்கள், கட்டில், சேர் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் வீட்டின் ஓடுகளை உடைத்து சூறையாடினர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் சென்று பார்வையிட்டு வி்சாரணை நடத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story