கழுத்தை இறுக்கி தொழிலாளி கொலை
பண்ருட்டி அருகே கழுத்தை இறுக்கி தொழிலாளியை கொலை செய்த தந்தை-மகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பண்ருட்டி
வெல்டிங் தொழிலாளி
நெய்வேலி 30-வது வட்டம், திடீர் குப்பத்தை சோ்ந்தவர் ராமலிங்கம் மகன் ராமமூர்த்தி(வயது 39). வெல்டிங் தொழிலாளி. இவருக்கும் பண்ருட்டி அருகே உள்ள செம்மங்குப்பத்தை சேர்ந்த ராமமூர்த்தி மகள் சந்தியா(29) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சபரிஸ்ரீ(9), யாழினி(6), என்கிற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ராமமூர்த்தி தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி, குழந்தைகளிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் எதையும் வாங்கி தராமல் மனைவி குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சந்தியா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது கணவரிடம் இருந்து பிரிந்து, 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பெற்றோர் வீடான செம்மங்குப்பத்திற்கு வந்து வசித்து வருகிறார்.
கழுத்தை இறுக்கி கொலை
இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் ராமமூர்த்தி, தனது மாமனார் ஊரான செம்மங்குப்பத்திற்கு மதுபோதையில் வந்ததாக தெரிகிறது. அப்போது அவர் தனது மனைவி சந்தியாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ராமமூர்த்தி தனது மனைவி சந்தியாவை கத்தியால் குத்த முயன்றார். அதற்குள் சுதாரித்துக்கொண்ட சந்தியா அங்கிருந்து தப்பிவிட்டார். பின்னர் அவர் தனது தந்தை ராமமூர்த்தியுடன் சேர்ந்து அருகில் இருந்த கயிற்றால், ராமமூர்த்தியின் கழுத்தை இறுக்கினார். இதில் ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையறிந்த ராமமூர்த்தியும், சந்தியாவும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
தந்தை-மகளுக்கு வலைவீச்சு
இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை சம்பவம் பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் ராமமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து ராமமூர்த்தி, சந்தியா ஆகிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட தொழிலாளியை தந்தை-மகள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.