ரெயிலில் அடிப்பட்டு தொழிலாளி பலி
பெண்ணாடத்தில் ரெயிலில் அடிப்பட்டு தொழிலாளி உயிரிழந்தார். மேலும் அவர் மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்ற 6 ஆடுகளும் செத்தன.
பெண்ணாடம்,
கம்மாபுரம் அடுத்த தர்மநல்லூரை சேர்ந்தவர் செந்தில் (வயது 55). தொழிலாளி. இவர் ஆடுகள் வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று செந்தில் பெண்ணாடம் ரெயில்வே தண்டவாளத்தில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.
மேலும் அவருக்கு சொந்தமான 6 ஆடுகளும் அங்கு செத்துகிடந்தன. இது குறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் ரெயில்வே போலீசார் மற்றும் பெண்ணாடம் சப்- இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
ரெயில்மோதியது
இதில் ரெயில்வே தண்டவாளத்தை கடந்து ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்ற போது, அந்த வழியாக வந்த ரெயிலில் எதிர்பாராதவிதமாக மோதியதில், செந்தில் மற்றும் அவரது ஆடுகளும் இறந்தது தெரியவந்தது. இறந்தவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விருத்தாசலம் இருப்பு பாதை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.