விபத்தில் தொழிலாளி பலி: நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி கடலூர் கோர்ட்டு நடவடிக்கை


விபத்தில் தொழிலாளி பலி: நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி கடலூர் கோர்ட்டு நடவடிக்கை
x
தினத்தந்தி 25 March 2023 12:15 AM IST (Updated: 25 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் தொழிலாளி பலியான வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

கடலூர்

புவனகிரி அருகே உள்ள வில்லியநல்லூரை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி மகன் நவீன்ராஜ் (வயது 48), தொழிலாளி. இவர் கடந்த 9.7.2018 அன்று மோட்டார் சைக்கிளில் கடலூர்-பூண்டியாங்குப்பம் சாலையில் சென்றபோது, அவ்வழியாக வந்த விழுப்புரம் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ் மோதியதில், உயிரிழந்தார். இதனால் அவரது பெற்றோர் மற்றும் சகோதரர்கள் நஷ்டஈடு பெற்று தரக்கோரி கடலூர் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 21.1.2021 அன்று, நவீன்ராஜ் குடும்பத்திற்கு விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடாக ரூ.12 லட்சத்து 4 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகம் நஷ்டஈடு வழங்காததால் நவீன்ராஜ் பெற்றோர், கோர்ட்டில் நிறைவேற்று மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த கடலூர் கூடுதல் மாவட்ட நீதிபதி பிரகாஷ், விபத்தில் இறந்த நவீன்ராஜ் குடும்பத்திற்கு விழுப்புரம் போக்குவரத்து கழகம் வட்டியுடன் ரூ.15 லட்சத்து 4 ஆயிரத்து 311 கொடுக்க வேண்டும், இல்லையென்றால் சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பஸ் ஜப்தி செய்யப்படும் என உத்தரவிட்டார். இருப்பினும் நஷ்டஈடு வழங்கப்படவில்லை. இதனால் நேற்று மதியம் கடலூர் பஸ் நிலையத்திற்கு வந்த விழுப்புரம் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

1 More update

Next Story