டிப்பர் லாரி மோதி தொழிலாளி பலி
திருச்செங்கோடு அருகே டிப்பர் லாரி மோதி தொழிலாளி இறந்தார்.
திருச்செங்கோடு
தொழிலாளி
சேலம் மாவட்டம் மேச்சேரி கத்தராயனூர் பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 49). இவரது மனைவி ஈஸ்வரி (40). இவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக திருச்செங்கோடு குமராமங்கலம் கோயக்காடு பகுதியில் உள்ள தோட்டத்தில் தங்கி தறிப்பட்டறையில் தொழிலாளியாக வேலைக்கு சென்று வந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை சின்னத்தம்பி தனது மொபட்டில் தறி பட்டறைக்கு வேலைக்கு சென்றார். திருச்செங்கோடு-நாமக்கல் ரோட்டில் குமாரமங்கலம் தபால் நிலையம் அருகே வரும்போது எதிர்பாராதவிதமாக மொபட்டி மீது டிப்பர் லாரி மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சின்னத்தம்பி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விசாரணை
இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் திருச்செங்கோடு ரூரல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சின்னத்தம்பிக்கு தாமரைக்கண்ணன், அருண்குமார், கவுரி சங்கர் என்ற மூன்று மகன்கள் உள்ளனர்.