விழுப்புரத்தில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற தொழிலாளிக்கு தர்மஅடி


விழுப்புரத்தில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற தொழிலாளிக்கு தர்மஅடி
x

விழுப்புரத்தில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற கட்டிட தொழிலாளிக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். அவர் பசியின் கொடுமையால் திருடியதாக போலீசாரிடம் கூறினார்.

விழுப்புரம்

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் கல்லூரி சாலை ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் பிரஜித்மேரி (வயது 45). இவர் பள்ளிக்கு சென்று தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த வாலிபர் ஒருவர், திடீரென பிரஜித்மேரி கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றார். இதில் சுதாரித்துக்கொண்ட அவர், திருடன்.... திருடன்.... என கூச்சலிட்டபடியே தன்னுடைய நகை பறிபோகாமல் கையால் கெட்டியாக பிடித்துக்கொண்டார்.

தொழிலாளிக்கு தர்மஅடி

இந்த சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் அங்கு விரைந்து ஓடி வந்தனர். பொதுமக்களை பார்த்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். உடனே அவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரை விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் தென்கீரனூரை சேர்ந்த மகேந்திரன் (29) என்பதும், இவர் திருச்சி பெருந்துறையூரில் கட்டிட வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

பசியின் கொடுமையால் திருடியதாக

மேலும் போலீஸ் விசாரணையில், தான் கடந்த சில நாட்களாக வேலையின்றி சுற்றி வந்ததாகவும், உணவு சாப்பிட கூட கையில் பணம் இல்லாமல் திருச்சியில் இருந்து ரெயில் ஏறி விழுப்புரம் வந்துள்ளதாகவும், இங்கும் சிலரிடம் உணவு சாப்பிட பணம் கேட்டு யாரும் கொடுக்காததால் பசியின் கொடுமை தாங்க முடியாமல் வேறு வழியின்றி நகை பறிப்பில் ஈடுபட்டதாக மகேந்திரன் கூறினார். தொடர்ந்து, அவருக்கு போலீசார் உணவு வழங்கினர். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story