விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தொழிலாளி தற்கொலை முயற்சி


விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தொழிலாளி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 13 April 2023 12:15 AM IST (Updated: 13 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் பட்டா வழங்க கோரி தொழிலாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்

விக்கிரவாண்டி,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ஒரத்தூர் நத்தமேடு காலனியை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 46) கூலி தொழிலாளி. இவர் தனது இடத்துக்கு பட்டா வழங்க கோரி விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்திருந்தார். இது தொடர்பாக பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் அவருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த கமலக்கண்ணன் நேற்று மாலை விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் தனக்கு பட்டா வழங்க வேண்டும் என கூறினார். ஆனால் அதிகாரிகள் அவருக்கு சரியான பதிலை கூறவில்லை என தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த அவர் தான் கொண்டு வந்த விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், உடனே ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது பற்றி தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று கமலக்கண்ணனிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story