நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பாம்புடன் வந்த தொழிலாளியால் பரபரப்பு


நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு  பாம்புடன் வந்த தொழிலாளியால் பரபரப்பு
x

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த தொழிலாளியால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல்

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த தொழிலாளியால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொழிலாளி

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள ஏளூர் ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 65). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் சோளத்தட்டு அறுத்து தனது வீட்டின் அருகே அடுக்கி வைத்துள்ளார். நேற்று காலை 11 மணி அளவில் சோளத்தட்டை வெயிலில் உலர வைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது சோளத்தட்டில் இருந்த விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு ஒன்று அவரது இடது காலில் கடித்து விட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பழனி அருகில் கிடந்த கம்பை எடுத்து பாம்பை அடித்து கொன்று விட்டார். இதையடுத்து அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர்.

பாம்புடன் வந்த உறவினர்கள்

இங்கு பாம்பு கடித்த பழனிக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரால் அடித்து கொல்லப்பட்ட பாம்பையும் ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு, உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து வந்தனர். இங்கு அந்த பாம்பை அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்து சென்றனர். இந்த சம்பவம் சிறிது நேரம் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story