அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம்


அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம்
x

அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம்

தஞ்சாவூர்


கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு கும்பகோணம் பகுதியில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கார்த்திகை தீப விழா

ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று கார்த்திகை தீப விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் இந்துக்கள் கோவில்கள் மற்றும் தங்களது வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். இதற்காக ஏராளமான கைவினை கலைஞர்கள் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அகல் விளக்கு தயாரிக்கும் தொழிலாளி ஒருவர் கூறுகையில், கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். முன்பு கார்த்திகை விழா அன்று பொதுமக்கள் அகல்விளக்குகளை வாங்கி தீப எண்ணெய் ஊற்றி தீபங்களை ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மெழுகுவர்த்திகள், அலங்கார மின்விளக்குகள் போன்றவற்றை பயன்படுத்தி கார்த்திகை தீப விழாவை கொண்டாடி வருகின்றனர்.

விற்பனை கணிசமாக குறைந்துள்ளது

இதனால் அகல் விளக்குகள் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. மேலும் கடந்த 2ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அகல் விளக்குகள் உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது மூலப்பொருட்கள் விலை உயர்வு, கூலி உயர்வு போன்ற காரணங்களால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. மேலும் பருவமழை காலங்களில் அகல் விளக்குகளை உருவாக்கி காய வைத்து தயாரிப்பது சவாலான காரியமாக இருந்தது. இருந்த போதும் இந்த ஆண்டு கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு ஏராளமான அகல்விளக்குகளை தயார் செய்து வைத்துள்ளோம். பொதுமக்கள் அகல் விளக்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினால் கணிசமான லாபம் கிடைக்கும் என்றார்.


Next Story