தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்; திருமழிசை டாஸ்மாக் குடோனில் இருந்து மீண்டும் மதுபான விநியோகம் தொடக்கம்


தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்; திருமழிசை டாஸ்மாக் குடோனில் இருந்து மீண்டும் மதுபான விநியோகம் தொடக்கம்
x

அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை ஏற்று வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

சென்னை,

பூந்தமல்லியை அடுத்த திருமழிசை சிப்காட் பகுதியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானைங்களை அனுப்பி வைக்கும் டாஸ்மாக் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் குடோனில் இருந்து லாரிகள் மூலமாக தினந்தோறும் மதுபானங்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன.

இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக லாரிகள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 4 கோடி ரூபாய் இன்னும் வழங்கப்படவில்லை எனக்கூறி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் குடோனில் மதுபானம் ஏற்றிச்செல்லும் 60-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 300 மதுபான கடைகளுக்கு மதுபான விநியோகம் தடைப்பட்டது.

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், 3 கோடி ரூபாய் வரையிலான நிலுவைத் தொகையை பெற்றுத் தருவதாக உறுதியளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருமழிசை டாஸ்மாக் குடோனில் இருந்து வாகனங்களில் ஏற்றப்பட்ட மதுபானங்களை டாஸ்மாக் கடைகளுக்கு கொண்டு செல்லும் பணி மீண்டும் தொடங்கியது. அதிகாரிகள் உறுதியளித்தபடி நிலுவைத் தொகை தரப்படாவிட்டால், நாளை மீண்டும் போராட்டம் நடைபெறும் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story