கும்பகோணம்: ஆடிப்பெருக்கை முன்னிட்டு சப்பரம் தயாரிக்கும் பணி தீவிரம்


கும்பகோணம்: ஆடிப்பெருக்கை முன்னிட்டு சப்பரம் தயாரிக்கும் பணி தீவிரம்
x

கும்பகோணம் பகுதியில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சப்பரம் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கும்பகோணம்:

தமிழகத்தில் வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கு விழா காவேரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவேரி ஆற்றங்கரைக்கு வரும் சிறுவர் சிறுமிகள் சப்பரத்தில் சாமி படங்களை வைத்து அலங்கரித்து ஆற்றங்கரைக்கு இழுத்து வந்து சிறப்பு பூஜைகள் முடிந்த பிறகு மீண்டும் வீட்டுக்கு இழுத்து வருவது வழக்கம். இந்த விழா காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு காவிரி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்லும் நிலையில் வருகிற 3-ந் தேதி ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக நடைபெற உள்ளது. இதையொட்டி கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் சப்பரம் தயாரிக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து கும்பகோணம் ஏரகரம் பகுதியில் சப்பரம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளி ஒருவர் கூறுகையில்,

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் சப்பரங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். இதற்காக ஊதியம் தூங்கு மூஞ்சி நெட்டில் உள்ளிட்ட மரங்களை வெட்டி சப்பரம் தயாரிப்பிற்கு பயன்படுத்துகிறோம். தற்போது விலைவாசி உயர்வு காரணமாக மரங்கள் மற்றும் ஆணி தகரம் உள்ளிட்ட பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. பணியாளர்களின் கூலியும் கணிசமாக உயர்ந்துள்ளது.

இதனால் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு சப்பரங்கள் தயாரிப்புக்கு கூடுதல் செலவு ஏற்பட்டது. இதன் காரணமாக சப்பரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் மட்டுமே ஓரளவு வருவாய் கிடைக்கும் என்கிற நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளோம். இதன் காரணமாக சாதாரணமாக ரூபாய் 100 விற்பனை செய்யப்படும் சப்பரங்கள் ரூபாய் 250 வரை விலை உயர வாய்ப்புள்ளது என்றார்.


Next Story