செண்பகராமன்புதூர் டாஸ்மாக் குடோன் முன்பு சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


செண்பகராமன்புதூர் டாஸ்மாக் குடோன் முன்பு  சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

செண்பகராமன்புதூர் டாஸ்மாக் குடோன் முன்பு சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

செண்பகராமன்புதூரில் மாவட்ட அரசு டாஸ்மாக் குடோன் உள்ளது. இங்கு லாரிகளில் வரும் மதுப்பாட்டில்களை இறக்குவதற்காக 44 சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். மதுபாட்டில் வகைகளுக்கு தகுந்தபடி கூலி வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் பீர் பெட்டி ஒன்றுக்கு ரூ.4-ல் இருந்து ரூ.8 ஆகவும், வெளிநாட்டு மதுபான பெட்டி ஒன்றுக்கு ரூ.50-ல் இருந்து ரூ.60 ஆகவும், குடோன் விட்டு குடோன் மாற்றும் போது பெட்டி ஒன்றுக்கு ரூ.10-ல் இருந்து ரூ.15 ஆகவும் இறக்கு கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் (சி.ஐ.டி.யு.) மற்றும் டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்புக்குழு சார்பில் டாஸ்மாக் குடோன் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சம்மேளத்தின் செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. மாவட்ட பொதுச்செயலாளர் சந்திரபோஸ் தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் தங்க மோகன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. தாலுகா செயலாளர் சக்திவேல் மற்றும் சுமைப்பணி தொழிலாளர் சம்மேளன நிர்வாகிகள் ராஜன், வில்சன், மீரான், வின்சென்ட் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story