தொழிலாளியை தாக்கி ரூ.2 ஆயிரம் பறிப்பு; வாலிபர் கைது
தொழிலாளியை தாக்கி ரூ.2 ஆயிரம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மணமேல்குடி தாலுகா வெள்ளூரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 23). இவர் அறந்தாங்கி- புதுக்கோட்டை சாலையில் உள்ள லாரி செட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டை சாலையில் உள்ள மதுக்கடையில் ராமகிருஷ்ணன் மது குடித்துவிட்டு சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ராமகிருஷ்ணனை தாக்கி அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்தனர். பின்னர் ராமகிருஷ்ணனை மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்று இரவு முழுவதும் தாக்கினர். அதன் பிறகு அவரை இடையார் வெள்ளாற்றுப்பாலத்தில் இறக்கி விட்டு சென்றனர். இதில் படுகாயம் அடைந்த ராமகிருஷ்ணன் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக அறந்தாங்கி டவுன் கோட்டை பகுதியை சேர்ந்த சூர்யா (24) என்பவரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.