மின் உற்பத்தி, எத்தனால் தொழிற்சாலை திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம்
சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலையில் மின் உற்பத்தி, எத்தனால் தொழிற்சாலை திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது.
சேத்தியாத்தோப்பு,
ஆய்வுக்கூட்டம்
சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கூடுதல் மின் உற்பத்தி திட்டம் மற்றும் எத்தனால் தொழிற்சாலை திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். வேளாண் துறை சிறப்பு செயலாளர் ஆபிரகான், கூடுதல் ஆணையர் அன்பழகன், வேளாண்மை இயக்குனர் அண்ணாதுரை, கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியன், வேளாண் துறை இணை இயக்குனர் சிவமலர், சர்க்கரைத்துறை தலைமை பொறியாளர் பிரபாகரன், தலைமை ரசாயனர் முத்து வேலப்பன், தலைமை கரும்பு அலுவலர் மாமுண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் சதீஷ் வரவேற்றார்.
இதில் கரும்பு விவசாய சங்க நிர்வாகிகள் முத்துசாமி, தேவதாஸ் படையாண்டவர், சிட்டிபாபு, வீரசோழன் ஆண்டவர், ஆதிமூலம், குஞ்சிதபாதம், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், மனோகரன், சபாநாயகம், சேத்தியாத்தோப்பு நகர செயலாளர் வக்கீல் மனோகரன், பேரூராட்சி தலைவர் கருணாநிதி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மதியழகன், நீதி செந்தில், செல்வகுமார் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
எத்தனால் தொழிற்சாலை
கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதியால் ரூ.75 கோடியே 54 லட்சத்தில் 15 மெகாவாட் கூட்டு மின் உற்பத்தி திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டது. அந்த பணி கிடப்பில் போடப்பட்டது. இந்த திட்டத்தை விரிவுப்படுத்தி பணிகளை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஆலையை நவீனப்படுத்த ரூ.13 கோடியே 63 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
மேலும் ரூ.116 கோடியில் எத்தனால் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 18 மாதத்தில் உற்பத்தியை தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கூட்டம் நடத்துவதற்கு ஏதுவாக ரூ.75 லட்சம் செலவில் கூட்ட அரங்கம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தொழிலாளர்களின் பதவி உயர்வு படிப்படியாக வழங்கப்படும். தினக்கூலி தொழிலாளர்கள் பணி நிரந்தரம் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.