முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம்


பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை முதல் நிலை அலுவலர்களுடன் கலெக்டர் அவசர ஆய்வுக்கூட்டத்தில் ஈடுபட்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

தமிழகத்தில் வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்டினை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதனை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் புயல் மழையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா நேற்று கூகுள் மீட் வழியாக அனைத்துத்துறைகளின் முதல் நிலை அலுவலர்களுடன் அவசர ஆய்வுக்கூட்டம் நடத்தினார். அப்போது கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கூறியதாவது:-

ஆரஞ்ச் அலர்ட்டினால் பெரம்பலூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள், வீடு இடிந்து விழும் நிலையில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி, தற்காலிக முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்திட வேண்டும்.

நீர்நிலைகளை கண்காணிக்க வேண்டும்

அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் நீர் இருப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். நீர்நிலைகளின் கரைகள் பாதுகாப்பாக பலமாக உள்ளதா? என்பதை பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை அலுவலர்கள் உடனடியாக ஆய்வு செய்து, அது குறித்த அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும். தொடர் மழை காரணமாக நீர்நிலைகளில் உடைப்பு ஏற்படுதல், குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகும் வாய்ப்புள்ள பகுதிகளில் தேவையான அளவு மணல் மூட்டைகளையும், பொக்லைன் எந்திரங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தொடர் மழை நேரத்தில் மின்கசிவு எங்கும் ஏற்படாத வகையில் மின்சாரத்துறையினர் கவனமுடன் பணியாற்ற வேண்டும்.

12,265 மணல் மூட்டைகள் தயார்

பெரம்பலூர் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 265 மணல் மூட்டைகளும், 126 ஜெனரேட்டர்களும், 96 மரம் அறுக்கும் எந்திரங்களும், 166 ஜே.சி.பி. வாகனங்களும், 147 பொக்லைன் வாகனங்களும், 109 நீர் உறிஞ்சும் எந்திரங்களும், 4 படகுகளும், 105 கொசு மருந்து தெளிக்கும் எந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன. இது தவிர பேரிடர் காலங்களில் மீட்புப் பணிக்குத் தேவையான அனைத்து விதமான ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்திட வேண்டும். பள்ளிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள வகுப்பறைகள், மழை காலத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் நிலையில் உள்ள வகுப்பறைகளையும் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக ஆய்வு செய்து முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

தகவல் தெரிவிக்க...

குடியிருப்பு பகுதிகளில் நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் வாய்ப்பு இல்லாமல் பார்த்துக்காள்ள வேண்டும். தொற்று ஏற்படாத வகையில் பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும். சுகாதாரத்துறை அலுவலர்கள் மருத்துவ முகாம்களை நடத்திட வேண்டும். அவசர சூழலை கருத்தில் கொண்டு அனைத்துத்துறை அலுவலர்களும் விழிப்புடன் இருந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் மழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க ஏதுவாக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டணமில்லா தொலைபேசி எண்களான 1077, 18004254556 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம். மேலும் 9384056223 என்ற வாட்ஸ் அப் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


Next Story