தென்கொரியாவில் உலக சாம்பியன் பேட்மிண்டன் போட்டி:ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றவருடன் மோதிய ஈரோடு வீரர்
தென்கொரியாவில் உலக சாம்பியன் பேட்மிண்டன் போட்டி: நடந்தது. இதில் ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றவருடன் ஈரோடு வீரர் மோதினாா்.
உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு சார்பில் தென்கொரியாவின் சியோல் நகரில் உலக சாம்பியன் பேட்மிண்டன் போட்டி கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கி 17-ந்தேதி வரை நடந்தது. உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த 1000-த்துக்கும் மேற்பட்ட பேட்மிண்டன் வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். இதில் இந்தியா சார்பில் ஈரோடு நீல்கிரீஸ் பேட்மிண்டன் அகாடமி தலைமை பயிற்சியாளரும், சர்வதேச வீரருமான கே.செந்தில்வேலன் 45 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் பங்கேற்றார்.
இவர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் 3 சுற்றுகள் விளையாடினார். பின்னர் ஒலிம்பிக்கில் 2 முறை சாம்பியன் பதக்கம் வென்ற அமெரிக்க வீரர் டோனி குணவானுக்கு எதிராக விளையாடி வெளியேறினார்.
ஈரோடு திரும்பிய பேட்மிண்டன் வீரர் கே.செந்தில்வேலனுக்கு ஈரோடு மாவட்ட இறகுபந்து கழக தலைவர் செல்லையன் என்கிற ராஜா மற்றும் நிர்வாகிகள், சக விளையாட்டு வீரர்கள், நீல்கிரீஸ் அகாடமி மாணவ- மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.