உலக சுற்றுச்சூழல் தினம்: கூடலூரில் மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கூடலூரில் மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கூடலூர்
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கூடலூரில் மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
விழிப்புணர்வு ஊர்வலம்
மத்திய சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கூடலூரில் மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கூடலூர் போலீஸ் நிலையம் முன்பு வனச்சரகர் ராஜேந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் ஆகியோர் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். ஊர்வலத்துக்கு கள அலுவலர் குமாரவேலு தலைமை தாங்கினார். தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராபர்ட், தொழிற்பயிற்சி மைய முதல்வர் ஷாஜி எம். ஜார்ஜ், நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு தாலுகா அலுவலகம், பழைய பஸ் நிலையம், மெயின் ரோடு வழியாக ஐந்து முனை சந்திப்பு பகுதியை அடைந்தது.
ஊர்வலத்தில் தோட்டத்தொழிலாளர் குழந்தைகள் தொழிற் பயிற்சி மைய மாணவர்கள் கலந்து கொண்டு மரங்களை நடுவோம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்ன பல்வேறு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். தொடர்ந்து தேவர்சோலை செல்லும் சாலை வழியாக சென்று தொழிற்பயிற்சி மையத்தை அடைந்தனர்.
மரக்கன்றுகள் நடப்பட்டன
இதேபோல் கூடலூர் அருகே மேபீல்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி வளாகத்திற்குள் மலர் செடிகள் மற்றும் தாவரக் கன்றுகள் நடப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரஷித் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிரியா மோள் தலைமை தாங்கினர். தலைமையாசிரியர் பால் விக்டர் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் பாபு, ஜெசிக்கா, ஸ்ரீநிவாஸ், பிரோஸ் உள்பட மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.
கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் சுனில் மரக்கன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் சோனி உள்பட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் கூடலூர் ஊராட்சி ஒன்றிய வண்டிப்பேட்டை நடுநிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சரஸ்வதி தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் பள்ளிக்கூட கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர்.