முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உலக தலைவர்கள் பாராட்டு-அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பெருமிதம்
4 மாதங்களில் ெசஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தியதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உலக தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர் என்று சேலத்தில் நடந்த அரசு பொருட்காட்சி தொடக்க விழாவில் அமைச்சர் சாமிநாதன் பெருமிதத்துடன் பேசினார்.
அரசு பொருட்காட்சி
சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிய பஸ்நிலையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அரசு பொருட்காட்சி தொடக்க விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:-
அரசின் பல்வேறு நலத்திட்ட பணிகள் குறித்தும், அவற்றை பொதுமக்கள் எளிதாக அறிந்து பயன்பெறும் வகையில் செய்தி-மக்கள் தொடர்புத்துறை சார்பில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பொருட்காட்சிகள் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சேலத்தில் 214-வது அரசு பொருட்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
32 அரங்குகள்
இப்பொருட்காட்சியில் செய்தி-மக்கள் தொடர்புத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை - உழவர் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, கூட்டுறவுத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை உள்ளிட்ட 26 அரசுத்துறை அரங்குகளும், சேலம் மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஆவின் உள்ளிட்ட 6 அரசு சார்பு நிறுவனங்களின் அரங்குகள் என 32 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த அரசு பொருட்காட்சியை சேலம் மட்டுமின்றி சேலத்தை சுற்றி உள்ள கிராமப்புற மக்கள் அனைவரும் குடும்பத்துடன் வருகைதந்து பார்வையிட்டு பயனடைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ரூ.37 லட்சம் வருவாய்
ஏற்கனவே மதுரை மற்றும் கோவையில் நடைபெற்ற அரசு பொருட்காட்சிகள் மூலம் அரசுக்கு ரூ.37 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. சுமார் 4 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டு பயனடைந்துள்ளனர்.
அடுத்த மாதம் முதல் வாரத்தில் திருநெல்வேலியிலும், அதைத்தொடர்ந்து, திருச்சி, வேலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் அரசு பொருட்காட்சி நடைபெற உள்ளது. இதன்மூலம் முதல்-அமைச்சர் அறிவித்துள்ள திட்டங்களை பற்றி பொதுமக்கள் எளிதில் அறிந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
உலக தலைவர்கள் பாராட்டு
உலகமே வியக்கும் வகையில் தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதாவது, 4 மாதங்களில் போட்டிக்கான ஏற்பாடு சிறப்பான முறையில் செய்ததால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உலக தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
எனவே, தமிழக மக்களின் நலனுக்காக தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் அவருக்கு அனைவரும் உறுதுணையாக இருந்து ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார்.