உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம்

உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அரசு சமுதாய சுகாதார மையத்தின் சார்பில் உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு மீன்சுருட்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மேகநாதன் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக பரப்ரம்மம் பவுண்டேஷன் நிறுவனர் முத்துக்குமரன் அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தம், பி.ஜி. ஜூவல்லரி உரிமையாளர் ரமேஷ்குமார், சி.பி.ராஜா மற்றும் மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள், நர்சிங் மாணவிகள், தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு, மக்கள்தொகை சம்பந்தமான பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். ஊர்வலமானது ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்திலிருந்து தொடங்கி அண்ணாசிலை, கடைவீதி, 4 ரோடு, மதனத்தூர் ரோடு மற்றும் ஒத்த தெரு வழியாக பஸ் நிலையத்திற்கு வந்து முடிவடைந்தது. முடிவில் மீன்சுருட்டி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.