ஆடி 2-வது வெள்ளிக்கிழமையையொட்டிஅம்மன் கோவில்களில் பக்தர்கள் வழிபாடுபால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்


தினத்தந்தி 29 July 2023 12:15 AM IST (Updated: 29 July 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஆடி 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் பால்குடம் எடுத்து சென்றும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

கள்ளக்குறிச்சி


சங்கராபுரம்,

ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமையான நேற்று அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன்படி, கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் 13-ம் ஆண்டு பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

இதையொட்டி கோமுகி ஆற்றங்கரையில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பெண்கள் சிகப்பு நிற ஆடை அணிந்து பால்குடம் எடுத்துக்கொண்டு மேளதாளத்துடன் கச்சேரி சாலை, நான்குமுனை சந்திப்பு, சேலம்மெயின் ரோடு, கவரைதெரு, கிராம சாவடி தெரு வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கள்ளக்குறிச்சி சிவகாமசுந்தரி சிதம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள துர்க்கை அம்மனுக்கு ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ராகு கால சிறப்பு பூஜை நடைபெற்றது.

அம்மனுக்கு இளநீர், பன்னீர், பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், தேன், திருமஞ்சனம் போன்ற பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். அதை தொடர்ந்து, காலை 10.30 மணி முதல் 12 மணிவரை ராகுகால பூஜை நடைபெற்றது.இதில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் நெய் தீபம் ஏற்றியும், மஞ்சள், குங்குமம் கொடுத்தும் அர்ச்சனை செய்தனர். பெண்கள் துர்க்கை அம்மனை துதிபாடல் பாடி வழிபட்டனர்.

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் ஏரிக்கரை துர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதே போன்று பூட்டை மாரியம்மன் கோவில், சங்கராபுரம் வாசவி அம்மன், புற்றுமாரியம்மன், நாக தேவதையம்மன், தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன், மகாநாட்டு மாரியம்மன் கோவில் உள்ளிட்ட சங்கராபுரம் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


Next Story