வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு


வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தினர். கோவில்களிலும் சிறப்பு பூஜை மற்றும் மகா தீபம் ஏற்றப்பட்டன.

புதுக்கோட்டை

கார்த்திகை தீப திருவிழா

கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை அன்று கார்த்திகை தீப திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீப திருவிழாவான நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் பலர் வீடுகளில் அகல்விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தினர். புதுக்கோட்டையில் வீடுகளை சுத்தம் செய்து, வீட்டின் முன்பு மற்றும் வாசல்படி, மாடிப்படி என வீடு முழுவதும் அகல்விளக்கு ஏற்றி வழிபட்டனர். மேலும் சாமிக்கு படையலிட்டு பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.

இதேபோல கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. கோவில் கோபுரங்களில் மகா தீபம் ஏற்றப்பட்டன. புதுக்கோட்டை சாந்தநாத சாமி கோவிலில் ராஜகோபுரத்தில் தீபம் ஏற்றப்பட்டது. குமரமலை முருகன் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதேபோல பல இடங்களில் கோவில்களில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டன. மேலும் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விராலிமலை முருகன் கோவில்

விராலிமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபதிருவிழாவை முன்னிட்டு மலைமேல் உள்ள முருக பெருமான் சமேத வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி கவசம் சாற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மாலை மலைமேல் உள்ள தீப கோபுரத்தில் நெய் ஊற்றி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து சண்முகநாதர் (முருகன்) வள்ளி- தெய்வானையுடன் மலையடிவாரத்தில் எழுந்தருளினார். பின்னர் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. அதன் பிறகு மலையை சுற்றி சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் முத்துராமன் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

வடகாடு, பொன்னமராவதி

வடகாடு பகுதியில் திருக்கார்த்திகையையொட்டி கோவில்கள், வீடுகள், கடை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் தீபங்களை ஏற்றி வழிபாடு நடத்தினர்.

பொன்னமராவதி வலையப்பட்டி மலையாண்டி சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருநாள் விழாவை முன்னிட்டு மலையாண்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் கோவிலின் மேல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த ராட்சத அண்டாவில் எண்ணெய் ஊற்றி மகா தீபம் ஏற்றப்பட்டது.

அன்னவாசல்

அன்னவாசல் அருகே நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் கார்த்திகை திருநாளையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் கடம்பர் மலையில் கார்த்திகை தீப கொப்பரையில் பக்தர்களின் பக்தி கோஷம் முழங்க மகாதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல்வேறு கோவில்கள், வீடுகளில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

குமரமலை பாலதண்டாயுதபாணி மலைக்கோவிலில் முருகன் பாலகனாக காட்சியளிப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு. இக்கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. கோவில் முன் கார்த்திகை தீப கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து கோவில் அடிவாரத்தில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

கந்தர்வகோட்டை

கந்தர்வகோட்டை ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோவில் முகப்பு கோபுரத்தில், கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

மணமேல்குடி, திருவரங்குளம்

கட்டுமாவடி அருகே செம்பியன் மகா தேவிப்பட்டினத்தில் செந்தில்வேலவர், வள்ளி, தெய்வானை கோவில் உள்ளது. இக்கோவிலில் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடைெபற்றது. தொடர்ந்து கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. திருவரங்குளத்தில் பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு ராஜ கோபுரத்தில் தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் உள் பிரகாரத்தில் உள்ள சுப்பிரமணியர் வள்ளி- தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது.

சொக்கப்பனை ெகாளுத்தப்பட்டது

ஆதனக்கோட்டை அருகே வடக்கு தொண்டைமான் ஊரணி கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைெபற்றது. கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.


Next Story