முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு


முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
x
சேலம்

ஆடி அமாவாசையையொட்டி சேலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஏராளமானோர் வழிபட்டனர்.

தர்ப்பணம்

ஆடி, தை மாதங்களில் வரும் அமாவாசை அன்று நீர் நிலைகளுக்கு சென்று புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஆடி அமாவாசையான நேற்று சேலம் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளுக்கு பொதுமக்கள் ஏராளமானோர் சென்று இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.

சேலம் மாநகரில் சுகவனேசுவரர் கோவில் அருகே உள்ள மண்டபத்தில் ஏராளமானோர் காலையில் வந்திருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். அதாவது தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் வரிசையாக தரையில் அமர்ந்து வாழை இலையில் அரிசி, பூ, தேங்காய், பழம், எள், பூசணிக்காய், அகத்தி கீரை, காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை படையலிட்டு தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.

சிறப்பு பஸ்கள்

ஒருசிலர் முன்னோர்களுக்கு பிடித்தமான உணவுகளை சமைத்து கொண்டு வந்து திதி கொடுத்தனர். பின்னர் அர்ச்சகர்கள் மந்திரம் முழங்கினர். அப்போது தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள், முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். பின்னர், எள், சாதத்தால் கலந்த உணவை காகங்களுக்கு வைத்து வழிபட்டனர். மஞ்சள், அரிசி கலந்த பொட்டை தர்ப்பணம் செய்ய வந்தவர்களின் குடும்பத்தாரின் நெற்றியில் அர்ச்சகர்கள் இட்டனர்.

ஆடி அமாவாசையையொட்டி சுகவனேசுவரர் கோவிலில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதேபோல் மூக்கனேரியில் காலை முதல் ஏராளமானவர்கள் திரண்டு வந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆடி அமாவாசையையொட்டி அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சேலம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து மேட்டூர், பவானி, கொல்லிமலை, ஒகேனக்கல், மாதேஸ்வரன் மலை, பூலாம்பட்டி ஆகிய இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


Next Story