குமரியில் 4 மையங்களில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வு


குமரியில் 4 மையங்களில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வு
x
தினத்தந்தி 27 Aug 2023 12:15 AM IST (Updated: 27 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் 4 மையங்களில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வு நடந்தது. இந்த தேர்வை ஆயுதப்படை டி.ஐ.ஜி. விஜயலட்சுமி ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் 4 மையங்களில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வு நடந்தது. இந்த தேர்வை ஆயுதப்படை டி.ஐ.ஜி. விஜயலட்சுமி ஆய்வு செய்தார்.

4 தேர்வு மையங்கள்

தமிழகம் முழுவதும் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 2023-ம் ஆண்டுக்கான தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு பட்டாலியன் ஆகியவற்றில் உள்ள ஆண், பெண் சப்-இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கான முதன்மை தேர்வு மற்றும் மொழி தகுதித்தேர்வு நேற்று நடந்தது. குமரி மாவட்டத்தில் இந்த தேர்வுக்காக 3.844 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களில் 1081 பேர் தேர்வு எழுதும் வகையில் நாகர்கோவில் பொன்ஜெஸ்லி என்ஜினீயரிங் கல்லூரியிலும் (பெண்கள் மட்டும்), ஆயிரம் பேர் தேர்வு எழுதும் வகையில் இறச்சகுளம் அமிர்தா என்ஜினீயரிங் கல்லூரியிலும் (ஆண்கள் மற்றும் பெண்கள்), ஆயிரம் பேர் தேர்வு எழுதும் வகையில் சுங்கான்கடை செயின்ட் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரியிலும் (ஆண்கள் மட்டும்), 763 பேர் தேர்வு எழுதும் வகையில் தோவாளை சி.எஸ்.ஐ. என்ஜினீயரிங் கல்லூரியிலும் (ஆண்கள் மட்டும்) என 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

பரிசோதனை

நேற்று காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை முதன்மைத் தேர்வும், பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.10 மணி வரை மொழி தகுதித்தேர்வும் நடந்தது. இந்த தேர்வுக்காக விண்ணப்பதாரர்கள் காலை 7 மணிக்கே தேர்வு மையத்திற்கு வந்திருந்தனர். தேர்வு எழுத வந்த பெண்களை 8 மணிக்கு பிறகு தேர்வு மையத்திற்குள் போலீசார் அனுமதித்தனர். பலத்த பரிசோதனைக்கு பிறகு தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர், எலக்ட்ரானிக் உபகரணங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டதையடுத்து தேர்வு எழுத வந்த ஆண்கள், பெண்கள் பலர் தங்களது உறவினர்களிடம் செல்போனை ஒப்படைத்து விட்டு சென்றனர். சிலர் செல்போன் வைப்பதற்காக தேர்வு மையத்தின் அருகில் ஒதுக்கப்பட்டிருந்த தனி அறையில் ஒப்படைத்துவிட்டு தேர்வு மையத்திற்குள் சென்றதை காண முடிந்தது.

ஸ்மார்ட் கை ெகடிகாரம், குடிநீர் பாட்டில் கொண்டு செல்வதற்கும் போலீசார் அனுமதிக்கவில்லை. தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு கொண்டு செல்வதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

டி.ஐ.ஜி. ஆய்வு

தேர்வு மையங்களை குமரி மாவட்ட சீருடை பணியாளர் தேர்வு கண்காணிப்பு அதிகாரியும், ஆயுதப்படை டி.ஐ.ஜி.யுமான விஜயலட்சுமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

போலீஸ் துறையில் பணிபுரிந்தவாறு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதுபவர்கள், பணியின்போது இறந்து அவரது வாரிசுதாரர்கள் உள்மாவட்டத்தில் தேர்வு எழுத அனுமதியில்லை. அவர்களுக்கு வேறு மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் வேறு மாவட்டத்தில் இருந்து சிலர் குமரி மாவட்டத்திற்கு தேர்வு எழுத வந்திருந்தனர். இதேபோல் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் வேறு மாவட்டங்களுக்கு தேர்வு எழுத சென்றிருந்தனர்.

789 பேர் 'ஆப்சென்ட்'

இந்த தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 3,844 பேரில் நேற்று காலை நடந்த முதன்மைத்தேர்வை 3061 பேர் மட்டும் எழுதினர். இவர்களில் 2210 பேர் ஆண்கள், 851 பேர் பெண்கள் ஆவர். 783 பேர் தேர்வு எழுத வரவில்லை. மாலையில் நடந்த மொழி தகுதித் தேர்வை 3055 பேர் மட்டும் எழுதினர். காலையில் தேர்வு எழுத வந்தவர்களில் 6 பேர் நேற்று மாலை தேர்வு எழுத வரவில்லை. இதனால் மாலையில் 789 பேர் ஆப்சென்ட் ஆகியிருந்தனர் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறினார்.

1 More update

Next Story