நூல் விலை கிலோவுக்கு ரூ.7 உயர்வு


நூல் விலை கிலோவுக்கு ரூ.7 உயர்வு
x

கடந்த 15 நாட்களில் நூல் விலை கிலோவுக்கு ரூ.7 உயர்ந்துள்ளதால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

திருப்பூர்

கடந்த 15 நாட்களில் நூல் விலை கிலோவுக்கு ரூ.7 உயர்ந்துள்ளதால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

முக்கிய மூலப்பொருள்

திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளாக நூல் உள்ளது. நூல் விலையை வைத்தே பனியன் ஆடைகளின் உற்பத்தி விலையை பின்னலாடை உற்பத்தியாளர்கள் நிர்ணயிப்பது வழக்கம். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்களில் 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகிறார்கள்.

நூல் விலை அபரிமிதமான உயர்வு காரணமாக பனியன் தொழில் மந்தநிலையை அடைந்தது. அதுபோல் உலக பொருளாதார மந்தம், ரஷியா-உக்ரைன் போர் காரணமாகவும் வெளிநாட்டு ஆர்டர்கள் வருகை வெகுவாக குறைந்து விட்டது. நூல் விலை குறைவாக இருந்தபோதிலும் ஆர்டர் கிடைக்காமல் பனியன் உற்பத்தி குறைந்து வந்தது.

கிலோவுக்கு ரூ.7 உயர்வு

தீபாவளி பண்டிகை நெருங்கும் இந்த நேரத்தில் புதிய ஆர்டர்களை எடுத்துச்செய்ய உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்கள் தயாராகி வந்தனர். இந்தநிலையில் கடந்த மாதம் 1-ந் தேதி நூல்விலையில் மாற்றமில்லை என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 16-ந் தேதி நூல் விலை கிலோவுக்கு ரூ.10 உயர்வு செய்து நூற்பாலைகள் அறிவித்தன. இது பனியன் உற்பத்தியாளர்களை கலக்கமடைய செய்தது. அதுபோல் பருத்தி பஞ்சு விலை உயர்வுக்கு ஏற்ப நூல் விலை நிர்ணயம் செய்து அறிவிக்கப்படும். மாதம் முதல் தேதி நிர்ணயம் செய்வதில் சிக்கல் உள்ளதாகவும் நூற்பாலைகள் தெரிவித்தன.

இந்தநிலையில் இந்த மாதத்துக்கான நூல் விலையை நூற்பாலைகள் நேற்று அறிவித்துள்ளன. அதன்படி 10-ம் நம்பர் நூல் முதல் 30-ம் நம்பர் நூல் வரை கிலோவுக்கு ரூ.7-ம், 34-ம் நம்பர் முதல் அதற்கு மேல் உள்ள நூல் கிலோவுக்கு ரூ.5-ம் உயர்ந்துள்ளது.

உற்பத்தியாளர்கள் தயக்கம்

அதன்படி, வரி நீங்கலாக கோம்டு ரக நூல் விலை 16-ம் நம்பர் ரூ.249, 20-ம் நம்பர் ரூ.252, 24-ம் நம்பர் ரூ.262, 30-ம் நம்பர் ரூ.272, 34-ம் நம்பர் ரூ.283, 40-ம் நம்பர் ரூ.298 ஆக உள்ளது. செமி கோம்டு ரகம் 16-ம் நம்பர் ரூ.239, 20-ம் நம்பர் ரூ.242, 24-ம் நம்பர் ரூ.252, 30-ம் நம்பர் ரூ.262, 34-ம் நம்பர் ரூ.273, 40-ம் நம்பர் ரூ.288 ஆக உள்ளது.

கடந்த 15 நாட்களில் நூல் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் புதிய ஆர்டர்களை எடுத்து செய்வதில் தயக்கம் காட்டி வருகிறார்கள். தற்போது தான் தொழில் நடக்கும் நிலையில் நூல் விலை உயர்வு மேலும் சிக்கலை ஏற்படுத்தும். அதனால் போட்டி நாடுகளுடன் போட்டி போட்டு நாம் ஆர்டர்களை எடுத்து செய்ய முடியாத நிலை ஏற்படும் என்று கூறியுள்ளனர்.


Related Tags :
Next Story