செயற்கை நூலிழை ஆடை உற்பத்தி மையமாக மாறும் திருப்பூர்


செயற்கை நூலிழை ஆடை உற்பத்தி மையமாக மாறும் திருப்பூர்
x

சுற்றுச்சூழல் பாதிப்பு குறைவதால் செயற்கை நூலிழை ஆடை உற்பத்தி மையமாக திருப்பூர் மாறும் என்றும், பின்னலாடை ஏற்றுமதி பலமடங்கு உயரும் என்றும் ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

திருப்பூர்

சுற்றுச்சூழல் பாதிப்பு குறைவதால் செயற்கை நூலிழை ஆடை உற்பத்தி மையமாக திருப்பூர் மாறும் என்றும், பின்னலாடை ஏற்றுமதி பலமடங்கு உயரும் என்றும் ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வளம்குன்றா வளர்ச்சி

திருப்பூர் அருகே பழங்கரையில் உள்ள ஐ.கே.எப். வளாகத்தில் சர்வதேச பின்னலாடை கண்காட்சி தொடங்கியது. கண்காட்சி குறித்து ஐ.கே.எப்.ஏ. தலைவர் சக்திவேல் கூறியதாவது:-

வளம்குன்றா வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத ஆடை தயாரிப்பு, மின்னணுமயமாக்கல், செயற்கை நூலிழை ஆடை தயாரிப்பு, ஆக்டிவ் ஆடைகள் தயாரிப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து கண்காட்சி நடக்கிறது. இதுவரை பருத்தி ஆடை தயாரிப்பில் இருந்து வந்தோம். இனிமேல் ஆக்டிவ் ஆடைகள், செயற்கை நூலிழை ஆடை தயாரிப்பு, வளம்குன்றா வளர்ச்சியை நோக்கி திருப்பூர் மாறி வருகிறது.

இதுவரை 90 சதவீதம் பருத்தி ஆடைகளும், 10 சதவீதம் செயற்கை நூலிழை ஆடைகளும் உற்பத்தி செய்யப்பட்டன. அந்த நிலை மாறி 50 சதவீதம் செயற்கை நூலிழை ஆடை தயாரிப்புக்கு திருப்பூர் மாறும்.

இந்த கண்காட்சிக்கு பிறகு திருப்பூரில் பெரியமாற்றத்தை காண முடியும். பசுமை திருப்பூர் என்பதை பறைசாற்றி திருப்பூரின் ஆயத்த ஆடை தொழில்துறையின் எதிர்காலம் மாறும். 30 வர்த்தகர்கள், உலகம் முழுவதும் முன்னணி நிறுவனங்களுக்கு வர்த்தகம் செய்யும் வர்த்தக முகவர்கள் 250 முதல் 300 பேர் பங்கேற்கிறார்கள். ரூ.300 கோடிக்கு உடனடி ஆர்டர் கிடைக்கும் என்று நம்புகிறோம். நீண்ட நெடுநாளைய வர்த்தகத்துக்கு இந்த கண்காட்சி பெரிதும் உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பூருக்கு முக்கிய இடம்

சிறப்பு விருந்தினரான எத்திக்கல் டிரேடிங் இனிசியேட்டிவ் நிறுவன முதன்மை இயக்குனர் பீட்டர் மெக்அலிஸ்டர் கூறும்போது, திருப்பூரில் பண்பாடு, கலாசாரம் மாறாமல் ஆடை தயாரிப்பில் நவீனத்தை புகுத்தி வருகிறார்கள்.

உலக சந்தை நிலவரத்தை அறிந்து செயற்கை நூலிழை ஆடை தயாரிப்பில் ஈடுபட தொடங்கியுள்ளனர். சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் ஆடை தயாரிப்பில் முனைப்புகாட்டி வருகிறார்கள். பசுமை ஆடை உற்பத்தி என்பது உலக அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. உலக பொருளாதாரத்தில் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி முக்கிய இடத்தை பிடிக்கும்' என்றார்.

வர்த்தகம் பலமடங்கு உயரும்

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது:-

வளம்குன்றா வளர்ச்சி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லா ஆடை தயாரிப்பு, கழிவு பொருட்களில் இருந்து மறுசுழற்சி ஆடை தயாரிப்பு ஆகியவற்றை செயல்படுத்துவதில் உலகின் மற்ற நாடுகளை விட, திருப்பூர் எப்படி மாறி இருக்கிறது என்பதை அறிய இந்த கண்காட்சியே உதாரணம். இதேவகையிலான ஆடை தயாரிப்பை நோக்கி திருப்பூர் நகர்ந்து கொண்டே இருக்கும்.

நெதர்லாந்து நாட்டின் டெக்ஸ்டைல் எக்ஸ்சேஞ்ச் சோர்சில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் உறுப்பினராக உள்ளது. அந்த அமைப்புடன் இணைந்துள்ள 500 வர்த்தகர்கள், இந்த கண்காட்சியின் நோக்கம் குறித்து தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஆர்டர் வருகை அதிகரித்து, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் பலமடங்கு உயரும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆடை உற்பத்தி மையம்

அபார்ட் தலைவர் இளங்கோவன் கூறியதாவது:-

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆர்டர்கள் வருகை அதிகரித்துள்ளது. செயற்கை நூலிழை மூலம் தயாரிக்கப்பட்ட ஆடைகள் அரங்குகளில் நிறைந்துள்ளன. கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் ஆடைகளும் இருப்பதை காண முடியும். பருத்தி ஆடை உற்பத்தி மையமாக இருந்த திருப்பூர், செயற்கை நூலிழை ஆடை உற்பத்தி மையமாக திகழும். இதன்மூலமாக பருத்தி விலையேற்றம் உள்ளிட்ட இடர்பாடுகளை தவிர்க்க முடியும்.

செயற்கை நூலிழை ஆடைகளை தயாரிக்கும்போது சாயமேற்றுதலுக்கு குறைந்த அளவு உப்பு பயன்படுத்தினால் போதும். அதுபோல் சாயக்கழிவுநீர் அதிகம் வெளியேறுவது குறைக்கப்படும். குறைந்த செலவில், சுற்றுச்சூழலை அதிகம் பாதிக்காத வகையில் ஆடை தயாரிக்க முடியும். செயற்கை நூலிழை ஆடை உற்பத்தி மென்மேலும் வளரும் நடவடிக்கையில் ஏற்றுமதியாளர்கள் சங்கம் முயற்சி மேற்கொண்டுள்ளது. விரைவில் திருப்பூர் செயற்கை நூலிழை ஆடை உற்பத்தி மையமாக மாறும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story