ஆண்டு முழுவதும் பயிர் இன்சூரன்ஸ் கோரி வழக்கு: காப்பீடு திட்டத்தில் அதிக கட்டுப்பாடுகளை விதித்தால் விவசாயிகள் பயன் அடைவது எப்படி?- மதுரை ஐகோர்ட்டு கேள்வி


ஆண்டு முழுவதும் பயிர் இன்சூரன்ஸ் கோரி வழக்கு: காப்பீடு திட்டத்தில் அதிக கட்டுப்பாடுகளை விதித்தால் விவசாயிகள் பயன் அடைவது எப்படி?- மதுரை ஐகோர்ட்டு கேள்வி
x

விவசாய பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தை வருடம் முழுவதும் அமல்படுத்தக்கோரிய வழக்கில் காப்பீடு திட்டத்தில் அதிக கட்டுப்பாடுகளை விதித்தால் விவசாயிகள் பயன் அடைவது எப்படி? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

மதுரை

விவசாய பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தை வருடம் முழுவதும் அமல்படுத்தக்கோரிய வழக்கில் காப்பீடு திட்டத்தில் அதிக கட்டுப்பாடுகளை விதித்தால் விவசாயிகள் பயன் அடைவது எப்படி? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

இன்சூரன்ஸ் திட்டம்

தஞ்சாவூரை சேர்ந்தவர் ஜீவகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

காவிரி ஆறு சம்பந்தமாக 11 புத்தகங்கள் எழுதி உள்ளேன். விவசாய விளை பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும், விவசாயிகளுக்கு நிதி சார்ந்த ஊக்கத்தை அளிக்கும் வகையிலும் பிரதம மந்திரியின் பசல் பீமா யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதில் விவசாயிகள் தங்கள் பயிர்களை இன்சூரன்ஸ் செய்தால் பேரிடர் காலத்திலும், தண்ணீர் இல்லாமல் பயிர்கள் சேதம் அடைந்தாலும் விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும். இந்த தொகையை மத்திய, மாநில அரசுகள் இணைந்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

பயிர்கள் சேதம் அடைந்தால் அதற்கான தொகையாக மாநில அரசு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வழங்குகிறது. ஆனால் மத்திய அரசு காப்பீடு செய்த தொகையை வழங்குவதில்லை.

பிரச்சினைகள்

தற்போது கர்நாடகத்தில் இருந்து காவிரி தண்ணீரை தமிழகத்திற்கு விவசாயத்திற்கு வழங்குவதில் அரசியல் ரீதியாக பல பிரச்சினைகள் உள்ளன.

இது போன்ற சூழ்நிலையில் விவசாயம் செய்த பயிர்கள் கருகி சேதமாகிவிடுகிறது. ஆனால் விவசாயிகளுக்கு உரிய இன்சூரன்ஸ் தொகை கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் விவசாயத்தை கைவிடும் சூழல் நிலவுகிறது. இதை தவிர்க்க குறிப்பிட்ட பருவத்திற்கு மட்டும் இன்சூரன்ஸ் என்பதை மாற்றி வருடம் முழுவதும் இன்சூரன்ஸ் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

விரிவான அறிக்கை

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, விவசாய இன்சூரன்ஸ் தொகையை விடுவிக்க கோரி மத்திய அரசுக்கு, தமிழக முதல்-அமைச்சர் கடிதம் எழுதி உள்ளார், என்றார்.

அப்போது நீதிபதிகள், ஒரு திட்டத்தை அறிவித்துவிட்டு அதை முறையாக அமல்படுத்துவதில்லை. மத்திய, மாநில அரசுகள் இணைந்து விவசாயிகளுக்கான காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். காப்பீடு திட்டத்தில் அதிக கட்டுப்பாடுகளை விதித்தால் எவ்வாறு விவசாயிகள் பயனடைய முடியும்? என கேள்வி எழுப்பினர்.

பின்னர் இந்த வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 28-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


Next Story