உதவி மையத்தை அணுகி விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம்


உதவி மையத்தை அணுகி விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம்
x
தினத்தந்தி 19 Sep 2023 6:45 PM GMT (Updated: 19 Sep 2023 6:46 PM GMT)

கலைஞர் மகளிா் உரிமை திட்டத்தில் பதிவு செய்தவர்கள் உதவி மையத்தை அணுகி அதன் நிலையை தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குறுஞ்செய்தி

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பயனாளிகளின் வங்கி கணக்குக்கு ரூ.1,000 அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பநிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு நேற்று முதல் அனுப்பி வைக்கப்படுகிறது.

விண்ணப்பத்தின் நிலை குறித்து

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள குடும்ப அட்டையிலுள்ள மகளிர்கள் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நிலை குறித்து தமிழ்நாடு முதல்வரின் உதவி மைய எண் 1100-ல் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் அனைத்து இ-சேவை மையங்கள் மற்றும் kmut.tn.gov.in/login.html என்ற கலைஞர் மகளிர் உரிமை திட்ட இணைய முகவரியில் உள்நுழைவு என்ற மெனுவை தேர்வு செய்து அதில் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து தங்களின் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம்.

இது தவிர கலெக்டர் அலுவலகம், அனைத்து கோட்டாட்சியர் அலுவலகம், அனைத்து தாலுகா அலுவலகங்கள், இதற்கென பிரத்யேகமாக செயல்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமை திட்ட உதவி மையத்தில் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம்.

30 நாட்களுக்குள்

கலைஞர் மகளிா் உரிமை திட்டத்தில் உதவித்தொகை கிடைக்காதவா்கள் விரும்பினால் குறுஞ்செய்தி பெறப்பட்ட 30 நாட்களுக்குள் அனைத்து இ-சேவை மையங்களிலும் கட்டணமின்றி கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேற்கண்ட இ-சேவை மையத்தில் மேல்முறையீடு செய்வதற்கு எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை.

வங்கிக்கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட தொகையான ஆயிரம் ரூபாயைதங்களின் விருப்பப்படி வங்கியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். மேற்படி தொகை குறிப்பிட்ட நாட்களுக்குள் எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் வங்கியிலிருந்து திரும்ப எடுத்துக் கொள்வார்கள் என அச்சப்பட தேவையில்லை.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story