இளம்பெண் குளத்தில் குதித்து தற்கொலை


இளம்பெண் குளத்தில் குதித்து தற்கொலை
x
தினத்தந்தி 22 Jun 2023 7:30 AM IST (Updated: 22 Jun 2023 7:30 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் குழந்தை பிறந்த ஒரு வாரத்தில் இளம்பெண் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆர்.டி.ஓ, போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் குழந்தை பிறந்த ஒரு வாரத்தில் இளம்பெண் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆர்.டி.ஓ, போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஆண் குழந்தை பிறந்தது

கோவை செல்வபுரம் சண்முகராஜபுரத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 21), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ஷாலினி (19). இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் ஷாலினி கர்ப்பமானார்.

பிரசவ வலி ஏற்பட்ட அவரை நவீன்குமார் மற்றும் உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 12-ந் தேதி அனுமதித்தனர். மறுநாள் அவருக்கு சுகபிரசவத்தில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தைக்கு எடை குறைவாக இருந்தது. இதன் காரணமாக அந்த குழந்தை இங்குபேட்டரில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது.

இளம்பெண் மாயம்

இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து நேற்று முன்தினம் ஷாலினி திடீரென மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே, கோவை வாலாங்குளத்தில் இளம்பெண் ஒருவரின் பிணம் கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குளத்தில் குதித்து தற்கொலை

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த இளம்பெண், காணாமல்போன ஷாலினி என்பதும், குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.

இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தற்கொலை செய்து கொண்ட ஷாலினிக்கு திருமணம் முடிந்து ஒரு ஆண்டுதான் ஆவதால் கோவை ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story