பொள்ளாச்சி அருகே கால்வாயில் பிணமாக மிதந்த இளம்பெண்-போலீஸ் விசாரணை
பொள்ளாச்சி அருகே கால்வாயில் பிணமாக மிதந்த இளம்பெண்-போலீஸ் விசாரணை
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூரை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் மரகதம் (வயது 25). இவா் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சிண்ட்டு என்பவரை திருமணம் செய்ததாகவும், 5 வயதில் மகன் உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையில் மரகதம் வலிப்பு நோய்க்கு மருந்து சாப்பிட்டு வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் மரகதம் நேற்று குளிப்பதற்காக பி.ஏ.பி. வாய்க்காலுக்கு சென்றார். பின்னர் அவர் அங்கு துணி துவைத்து கொண்டு இருந்தார். இதையடுத்து அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் வாய்க்காலில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். இளம்பெண் ஒருவர் வாய்க்காலில் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று, மரகதத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் துணி துவைக்கும் போது வலிப்பு நோய் வந்து மரகதம் தண்ணீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.