மரத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
சுரண்டை அருகே மரத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
சுரண்டை:
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வீராணம் கிராமத்தில் மரத்தில் வாலிபர் பிணம் தொங்கிக் கொண்டிருப்பதாக வீரகேரளம்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில், அவர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் தினேஷ் (வயது 22) என்பதை கண்டறிந்தனர். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆலையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்ததும், கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்றாலம் சென்று வருவதாக கூறிவிட்டு வந்ததும் தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.