குடும்ப தகராறில் கத்தியால் குத்தி வாலிபர் படுகொலை; அண்ணன்-தம்பி கைது


குடும்ப தகராறில் கத்தியால் குத்தி வாலிபர் படுகொலை; அண்ணன்-தம்பி கைது
x

தேனி அருகே குடும்ப தகராறில் கத்தியால் குத்தி வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். 3 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.

தேனி

தேனி அருகே குடும்ப தகராறில் கத்தியால் குத்தி வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். 3 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.

மனைவி, மாமியாரிடம் தகராறு

தேனி அருகே உள்ள மாரியம்மன்கோவில்பட்டியை சேர்ந்தவர் பானுகோவன். அவருடைய மகன் பொன்வண்ணன் (வயது 26). கூலித்தொழிலாளி. இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் கடந்த ஆண்டு திருமணம் ஆனது. இந்நிலையில் கர்ப்பிணியாக இருந்த அந்த சிறுமிக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.

பின்னர் சிறுமி தனது தாயார் வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்தார். பொன்வண்ணன் இன்று தனது மனைவி மற்றும் குழந்தையை பார்க்க மாமியார் வீட்டுக்கு சென்றார். அப்போது மனைவி மற்றும் குழந்தையை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு அவர் கூறினார்.

சில நாட்கள் கழித்து அனுப்பி வைப்பதாக அவருடைய குடும்பத்தினர் கூறியதாக தெரிகிறது. இதனால், அவர் தனது மனைவி மற்றும் மாமியாரிடம் தகராறு செய்து அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர், தனது வீட்டுக்கு வந்து விட்டார்.

வாலிபர் குத்திக்கொலை

இந்த பிரச்சினை குறித்து தட்டிக்கேட்பதற்காக பொன்வண்ணனின் வீட்டுக்கு அவருடைய மனைவியின் உறவினர்கள் சிலர் வந்தனர். அப்போது அவரும், அவருடைய அண்ணன் கார்த்திக் (30) என்பவரும் அவர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த தகராறின் போது, பொன்வண்ணன் மறைத்து வைத்து இருந்த கத்தியால் உறவினர்களை சரமாரியாக தாக்கினார். இதில் போடி புதூரை சேர்ந்த சுப்பிரமணி மகன் மனோஜ் (30), கிருஷ்ணன், பொன்வண்ணனின் மாமனார் மற்றும் மைத்துனர் ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர்.

இதில் பலத்த காயம் அடைந்த மனோஜ், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மற்ற 3 பேரும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

2 பேர் கைது

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடமும் போலீசார் விசாரித்தனர்.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்வண்ணன், அவருடைய அண்ணன் கார்த்திக் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story