2-வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை கோரி இளம்பெண் தர்ணா
முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம்பெண் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை, ஜூன்.14-
முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம்பெண் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இளம்பெண் தர்ணா
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் வந்தார். திடீரென அவர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து தர்ணாவை கைவிட்டார். பின்னர், அவர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தார்.
பின்னர் அந்த பெண் கூறியதாவது:-
திருமணத்தை மறைத்தார்
கடந்த ஆண்டு எனக்கு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டோம். இந்த நிலையில் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருப்பது சில மாதங்களுக்கு முன்புதான் தெரிய வந்தது. என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்து உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
அந்த பெண்ணின் புகார் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.