மூதாட்டியை தாக்கி 25 பவுன் நகை பறித்த வாலிபர் கைது


மூதாட்டியை தாக்கி 25 பவுன் நகை பறித்த வாலிபர் கைது
x

நெல்லையில் மூதாட்டியை தாக்கி 25 பவுன் நகையை பறித்துச்சென்ற வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை டவுன் பெரியதெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி கோமதி (வயது 82). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் ராமசாமி மற்றும் மகன் இறந்து விட்டனர். இதனால் கோமதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவருக்கு அக்கம்பக்கத்தினர் உதவி ெசய்து வருகின்றனர்.

கடந்த 17-ந்தேதி இரவு கோமதி வீட்டில் இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் தலையணையால் கோமதி முகத்தில் வைத்து அழுத்தி உள்ளார். பின்னர் கோமதியை தாக்கி, அவர் வைத்திருந்த 25 பவுன் நகைகளை கொள்ளையடித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஷிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்தார். அதில் ஒரு வாலிபர் உருவம் பதிவாகி இருந்தது. அதைக்கொண்டு விசாரித்த போது, நகை கொள்ளையில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை மகன் பிரவீன் (19) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து நகையை மீட்டனர்.

கோமதிக்கு, பிரவீன் அவ்வப்போது மருந்து, மாத்திரைகள் வாங்கி கொடுத்து வந்துள்ளார். அப்போது வீட்டில் பணம், நகை இருப்பதை தெரிந்து கொண்ட அவர், நகைகளை திருடி கடனை அடைக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி சம்பவத்தன்று நகைகளை கொள்ளையடித்து சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.


Next Story