முன்விரோதத்தில் பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
முன்விரோதத்தில் பெண்ணை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
விராலிமலை ஒன்றியம், தொண்டைமான்நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சேப்பிளாந்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 42). அதே பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன்கள் கார்த்தி (23), ஜீவா (20). கடந்த சில நாட்களுக்கு முன்பு சேப்பிளாந்தோப்பில் உள்ள பொது குடிநீர் குழாய் உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியினர் ஒன்று கூடி குடிநீர் குழாயை யார் உடைத்தது என்று கேட்டுக் கொண்டிருந்தபோது கார்த்தி தான் குடிநீர் குழாயை உடைத்தார் என்று பழனியம்மாள் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் பழனியம்மாள் மீது கார்த்தி விரோதத்தில் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று காலை கார்த்தி, அவரது தம்பி ஜீவா ஆகியோர் பழனியம்மாளிடம் சென்று குடிநீர் குழாயை நான் உடைத்தேன் என்று எப்படி கூறலாம் என்று தகராறு செய்ததுடன் அவரை கையாளும் கட்டையாலும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பழனியம்மாள் அளித்த புகாரின் பேரில் மாத்தூர் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து கார்த்தியை கைது செய்தார். பின்னர் அவரை கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தார். தலைமறைவாக உள்ள ஜீவாவை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.