நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய வாலிபர் கைது
நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நாட்டறம்பள்ளியை அடுத்த பந்தாரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 44). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (32) என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சண்முகம் தனது நிலம் குறித்து நாட்டறம்பள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்க சான்றிதழ் எடுத்துள்ளார். அதில் தனது தந்தை பெயருக்கு பதில் ரமேஷின் தந்தை பெயர் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகம் இது குறித்து ரமேஷிடம் கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஆத்திரமடைந்த ரமேஷ் இரும்பு ராடால் சண்முகத்தை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சண்முகம் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர்.