ராயபுரத்தில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் வைத்திருந்த வாலிபர் கைது


ராயபுரத்தில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் வைத்திருந்த வாலிபர் கைது
x

ராயபுரத்தில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை ராயபுரம் கல்மண்டபம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், தண்டையார்பேட்டை அன்னை சத்யா நகரைச் சேர்ந்த முகமது உசேன் (வயது 19), அதேபகுதி நேதாஜி நகர் 3-வது தெருவைச் சேர்ந்த நவாஸ் (19) மற்றும் பட்டேல் நகரை சேர்ந்த நாகூர் மீரான் (22) என்பதும், இவர்கள் பர்மா பஜாரில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்ப்பதும் தெரிந்தது.

மேலும் அவர்களிடம் இருந்த பையில் செல்போன்கள், டெம்பர் கிளாஸ்களுடன் ஒரு நோட்டும் இருந்தது. அதில் இந்திய நாட்டுக்கு எதிரான சில கருத்துகள் அடங்கிய வாசகம் எழுதி வைக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

இதையடுத்து 3 பேரிடமும் பல மணிநேரம் நடந்த விசாரணைக்கு பிறகு நாகூர்மீரான் மீது ராயபுரம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்ற 2 பேரையும் எச்சரித்து அனுப்பினர்.

தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வரும் நிலையில் இச்சம்பவம் வடசென்னை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story