போலி ரேஷன் கார்டு அச்சடித்த வாலிபர் கைது
அன்னூரில் போலி ரேஷன் கார்டு அச்சடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அன்னூர்
அன்னூரில் போலி ரேஷன் கார்டு அச்சடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
போலி ரேஷன் கார்டு
கோவை மாவட்டம் அன்னூர் கட்டபொம்மன் நகரை சேர்ந்தவர் அமுல் ஆண்ட்ரூஸ்(வயது 28). இவர் கடந்த 2017-ம் ஆண்டு அன்னூர் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது ரேஷன் கார்டு, வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு அரசு ஆவணங்களுக்கு பதிவு செய்யும் பணியை மேற்கொண்டு வந்தார்.
இதையடுத்து அந்த வேலையை விட்டுவிட்டு, 2020-ம் ஆண்டு முதல் அன்னூர் தாசில்தார் அலுவலகம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். அவரது கடையில் போலி ரேஷன் கார்டுகள் வினியோகிக்கப்படுவதாக அன்னூர் குடிமைப்பொருள் தாசில்தார் செல்விக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கைது
அதன்பேரில் அன்னூர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நித்யா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், விக்னேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று, அந்த கடையில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அன்னூர் தாசில்தார் அலுவலகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து, அது வராதவர்களுக்கு போலி ரேஷன் கார்டு அச்சடித்து வழங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்து 718 போலி ரேஷன் கார்டுகள், 2 செல்போன்கள், மடிக்கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
--------------------