கள்ளக்குறிச்சி வருவாய் அதிகாரி வீட்டில் நகை திருட்டு வாலிபர் கைது


கள்ளக்குறிச்சி வருவாய் அதிகாரி வீட்டில் நகை திருட்டு வாலிபர் கைது
x
தினத்தந்தி 23 April 2023 6:45 PM GMT (Updated: 23 April 2023 6:46 PM GMT)

கள்ளக்குறிச்சி வருவாய் அதிகாரி வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள காரனூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் செல்வகுமார்(வயது 42). இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல் பணிக்கு சென்றுவிட்டார். அவருடைய மனைவியும் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில் செல்வக்குமார் அலுவலக பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த 6 கிராம் தங்க நகையை காணவில்லை. உடனே அவர் அக்கம்பக்கத்தினர் விசாரித்தபோது, உங்களுடைய உறவினர் என்று 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்து சென்றதாக தெரிவித்தனர்.

வாலிபர் கைது

இதையடுத்து செல்வக்குமார் கச்சிராயப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்வக்குமார் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியது அகரகோட்டாலம் கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் அஜித் குமார்(20) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் நகை திருடியதை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அஜித்குமாரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 6 கிராம் நகையையும் பறிமுதல் செய்தனர்.


Next Story