சிறுமியிடம் நகை பறித்த வாலிபர் கைது
கண்டன்விளை அருகே சிறுமியிடம் 2 பவுன் நகையை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திங்கள்சந்தை:
கண்டன்விளை அருகே சிறுமியிடம் 2 பவுன் நகையை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிறுமியிடம் நகை பறிப்பு
இரணியல் போலீஸ் சரகம் கண்டன்விளை அருகே உள்ள சடையமங்கலம் இறுங்கன்விளாகத்துவீடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 43), கூலி தொழிலாளி. இவருடைய 13 வயது மகள் சம்பவத்தன்று காலையில் அருகில் உள்ள ஒரு வீட்டிற்கு பால் வாங்க நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் வழி கேட்பது போல் நடித்து, சிறுமியின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு, சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.
வாலிபர் கைது
இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் நகை பறித்த மர்ம நபரை தேடி வந்தனர். இந்தநிலையில், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஜாண்போஸ்கோ தலைமையிலான போலீசார் குன்னங்காடு பகுதியை சேர்ந்த அனீஸ் (25) என்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியிடம் நகை பறித்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி (பொறுப்பு) அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.