கந்துவட்டி கேட்டு பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது
சிதம்பரத்தில் கந்துவட்டி கேட்டு பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சிதம்பரம்,
ரூ.22 ஆயிரம் கடன்
சிதம்பரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன். இவரது மனைவி தமிழ்செல்வி(வயது 50). இவர், சிதம்பரம் சரஸ்வதி நகரை சேர்ந்த அம்பலவாணன் மகன் வெங்கடேசன்(34) என்பவரிடம் கடந்த 2002-ம் ஆண்டு ரூ.22 ஆயிரம் கடன் வாங்கினார். இதுவரை வட்டி தொகையுடன் சேர்த்து ரூ.70 ஆயிரம் வரை செலுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வெங்கடேசனும், அவரது நண்பரான சபரி என்பவரும் தமிழ்செல்வியின் வீட்டுக்கு சென்று, மேலும் ரூ.60 ஆயிரம் தர வேண்டும் எனவும், அதை தவணை முறையாக மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கூறினர்.
கந்துவட்டி கேட்டு மிரட்டல்
இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த தமிழ்செல்வி, ஏற்கனவே வாங்கிய கடனுக்கு பணத்தை கட்டிவிட்டதாகவும், மேற்கொண்டு பணம் தரமாட்டேன் என்றும் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும், தமிழ்செல்வியை ஆபாசமாக திட்டி, மிரட்டியதாக தெரிகிறது.
இது குறித்து தமிழ்செல்வி, சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கையெழுத்து போடப்பட்ட ஏராளமான வெற்று பத்திரங்கள், பணம் கொடுத்து எழுதி வாங்கிய அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தலைமறைவாக உள்ள சபரியை தேடி வருகின்றனர்.