பெரியார் சிலையை சேதப்படுத்திய வாலிபர் கைது


பெரியார் சிலையை சேதப்படுத்திய வாலிபர் கைது
x

பெரியார் சிலையை சேதப்படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர்

சிலை சேதம்

பெரம்பலூர் புதிய பஸ் நிலைய நுழைவு வாயில் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் பெரியார் சிலையின் இடதுகை பெருவிரல் சேதப்படுத்தப்பட்டு பீடத்தில் கிடந்தது. மேலும் சிலை மீது சிவப்பு நிற சால்வையை அணிவித்திருந்தது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

இதனையறிந்த அ.தி.மு.க.வினர் சிலை இருக்கும் பீடத்திற்கு சென்று சிவப்பு சால்வையை அகற்றினர். பின்னர் சேதமான பெரியார் சிலையின் கை பெருவிரலை ஒட்டி சீரமைத்தனர். மேலும் குற்றவாளியை கைது செய்யக்கோரி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் இளம்பை தமிழ்ச்செல்வன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை அமைதிப்படுத்தி குற்றவாளியை கைது செய்வதாக உறுதி அளித்து, கலைந்துபோகச்செய்தனர்.

தொழிலாளி கைது

இந்தநிலையில் அ.தி.மு.க. வழக்கறிஞர் அணியைச்சேர்ந்த கணேசன் இதுகுறித்து பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். இதுபற்றி போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரித்தபோது, குன்னம் தாலுகா ஒகளூர் காமராஜ் நகரைச்சேர்ந்த அண்ணாதுரை என்பவரது மகன் அனுசந்திரன் (வயது 28) சிலையை சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அனுசந்திரனிடம் விசாரணை நடத்தியபோது கிடைத்த தகவல்கள் பற்றி போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

அனுசந்திரன் ஐ.டி.ஐ. பிளம்பர் படிப்பு படித்துவிட்டு வேலையின்றி இருந்ததாகவும், தனது மனைவி மற்றும் 4-வது படிக்கும் மகளை பிரிந்து இருந்ததால் ஏற்பட்ட மனஉளைச்சலில் அவ்வப்போது மதுபோதையில் இருந்துள்ளார். இந்தநிலையில் பெரம்பலூருக்கு வந்த அனுசந்திரன் சம்பவத்தன்று இரவு மதுஅருந்திவிட்டு பெரியார் சிலை அருகே படுத்திருந்ததாகவும், சிறிதுநேரம் கழித்து எழுந்திருக்க முயன்றபோது, நிலைதடுமாறி பெரியார் சிலையின் கை கட்டை விரலை பிடித்து இழுத்ததால், சிலையின் கட்டைவிரல் உடைந்து விட்டது. மேலும் பெரியார் சிலையின் மீது தான் வைத்திருந்த சிவப்பு துண்டை போட்டுள்ளார். அதேபோல் எம்.ஜி.ஆர். சிலையின் மீதும் தன்னுடைய வெள்ளை நிற முழுக்கை சட்டையை போட்டுள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். கைதான அனுசந்திரன், பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story