முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் வாலிபர் கைது
புதுக்கோட்டை அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் கொலையானவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நமணசமுத்திரம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள தேக்காட்டூர் இளங்குடிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரகோபாலன் என்கிற சங்கர் (வயது 56). இவர் தேக்காட்டூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். தற்போது அவரது மனைவி முத்துலட்சுமி தேக்காட்டூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் மர்ம ஆசாமியால் சங்கர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். பின்னர் கொலையாளியை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மேலும் மோப்பநாய் உதவியுடன் போலீசார் குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அய்யனார் கோவில்
இந்தநிலையில் மேலதேமுத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்ற குண்டு கார்த்திக்கை (32) சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கரை கார்த்திக் வெட்டி கொன்றதை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து கார்த்திக் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-
இளங்குடிபட்டி கிராமத்தில் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலையொட்டி சங்கருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தை கோவிலுக்கு கொடுக்கும்படி சிலர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. ஆனால் சங்கர் நிலத்தை தர மறுத்ததாகவும் ஆனால் நிலத்தை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும் படி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதேபோல் கார்த்திக்கும் அடிக்கடி நிலம் சம்பந்தமாக சங்கரிடம் கேட்டுக் கொண்டு இருந்துள்ளார்.
கைது
நேற்று முன்தினம் இரவு அய்யனார் கோவில் அருகே உள்ள முனி கோவிலில் சங்கர் வழிபாடு செய்ய பூஜை பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த கார்த்திக் அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் சங்கருக்கு முனி கோவிலில் பூஜை செய்ய உதவி செய்வது போல் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் சங்கர் அர்ச்சனை செய்ய தேங்காயை உடைக்க வைத்திருந்த அரிவாளை கார்த்திக் எடுத்து சங்கரை வெட்டியுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத சங்கர் அங்கிருந்து தப்ப முயன்ற போது அவரை பின்தொடர்ந்து சரமாரியாக வெட்டியதில் சங்கர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இவ்வாறு போலீசார் கூறினர்.
இதையடுத்து, கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சங்கரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடைகள் மூடப்பட்டன
மேலும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தேக்காட்டூர் ஊராட்சிக்குட்பட்ட நமணசமுத்திரம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.