மாடுகள் திருடிய வழக்கில் வாலிபர் கைது
கெங்கவல்லி அருகே மாடுகள் திருடிய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கெங்கவல்லி:-
கெங்கவல்லி அருகே மாடுகள் திருடிய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மாடுகள் திருட்டு
கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டி புத்தூர் பகுதியில் வசிப்பவர்கள் தங்கசாமி, ராஜேந்திரன். இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களின் விவசாய தோட்டத்தில் இருந்த 4 பசுக்கள் நேற்று முன்தினம் திருட்டு போனது. இந்த நிலையில் அவர்கள் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்து விட்டு அதே பகுதியை சேர்ந்த கரிகாலன், அவருடைய நண்பர்கள் பாலாஜி, கருப்பையா ஆகியோர் சேர்ந்து பசுக்களை சரக்கு வாகனத்தில் ஏற்றி சென்று விற்பனை செய்து விட்டதாக கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறனிடம் புகார் அளித்தனர்.
புகாரை பெற்று கொண்ட போலீசார் தம்மம்பட்டி பகுதியில் ரோந்து சென்ற போது, நாகியம்பட்டி பெரியசாமி கோவில் அருகே திருட்டு ேபான 4 பசுக்களை 3 பேர் ஓட்டிச்செல்வதை கண்டுபிடித்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் 3 பேரும் மாட்டை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். அவர்களில் ஒருவரை மடக்கி பிடித்து விசாரித்த போது, அவர் ஆணையம்பட்டி புத்தூர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் கருப்பையா (வயது 27) என்பது தெரியவந்தது. தப்பி ஓடியவர்கள் கரிகாலன் மற்றும் பாலாஜி எனவும், 3 பேரும் சேர்ந்து 4 பசுக்களை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.
கைது
இதையடுத்து கருப்பையாவை போலீசார் கைது செய்தனர். கரிகாலன், பாலாஜி ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர். இதனிடையே போலீசார் நடத்திய விசாரணையில் கரிகாலனின் சித்தப்பா சாந்தமூர்த்தி, தாயார் சசிகலாவும் இந்த திருட்டுக்கு உடந்தையாக இருந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து இந்த திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட கருப்பையா மற்றும் தலைமறைவாக உள்ள பாலாஜி, கரிகாலன் மற்றும் அவருடைய சித்தப்பா சாந்த மூர்த்தி, தாயார் சசிகலா ஆகிய 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் நேற்று முன்தினம் இரவு மாடுகளை மீட்டுக்கொண்டு வராத நிலையில் மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் உறவினர்கள் ஆத்தூர்-திருச்சி சாலையில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டு இருந்தனர். பொது அனுமதிக்கு குந்தகம் விளைவித்ததாக மாட்டின் உரிமையாளர்கள் உள்பட 50 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.